Logo
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
குறள் 619

திருச்சி கோட்டையில் விஜய்யின் 'விசில்' சத்தம்: 1000 கோடி ஊழல் முதல் கள்ளக் கூட்டணி வரை... திமுக-வை கிழித்துத் தொங்கவிட்ட அதிரடி உரை!

திருச்சி கோட்டையில் விஜய்யின் 'விசில்' சத்தம்: 1000 கோடி ஊழல் முதல் கள்ளக் கூட்டணி வரை... திமுக-வை கிழித்துத் தொங்கவிட்ட அதிரடி உரை!
ஆசிரியர்: குமார்2026-04-02

"ஊழல் இருளை விரட்ட விசில் சத்தம் ஒலிக்கட்டும்": திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆவேச முழக்கம்! திருச்சி: திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். தற்போதைய திமுக அரசின் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்த அவர், மாற்றத்திற்கான ஒரே வழி 'விசில்' சின்னமே என்று சூளுரைத்தார்.

மக்களின் துயரமும் அரசின் மெத்தனமும்

கூட்டத்தில் உரையாற்றத் தொடங்கிய விஜய், திருச்சி மக்களின் நலன் விசாரித்த கையோடு, தற்போதைய கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்துப் பேசினார். "கேஸ் புக் பண்ணா புக் ஆகுதா? இந்த கேஸ் பிரச்சனையால எத்தனை டீக்கடைகள், ஹோட்டல்கள் மூடப்பட்டிருக்குன்னு தெரியுமா? இதனால மக்களுக்கு எவ்வளவு நஷ்டம்! அரசு முன்கூட்டியே உஷாரா இருந்திருந்தா இந்த தட்டுப்பாட்டை தடுத்திருக்கலாம். ஆனால், மக்களுக்கு ஒரு பிரச்சனைன்னா டெல்லிக்கு போகாத முதலமைச்சர் ஸ்டாலின், அவர் வீட்டுல ஒரு ரைடுன்னா மட்டும் டெல்லிக்கு பறக்குறாரு," என்று கடுமையாக விமர்சித்தார்.

பொய் வாக்குறுதிகளும் ஏமாற்றப்பட்ட மக்களும்

கடந்த தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்னவானது என்று கேள்வி எழுப்பிய விஜய், பின்வரும் பட்டியலை முன்வைத்தார்:

கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என்ன ஆச்சு?

கரும்புக்கு ஆதார விலை 4000 ரூபாய் தருவோம்னு சொன்னீங்களே, தந்தீங்களா?

ரேஷனில் கூடுதல் சர்க்கரை மற்றும் உளுந்தம்பருப்பு திட்டம் எங்கே போனது?

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்லி மாணவர்களை ஏமாற்றியது ஏன்?

"செய்ய முடியாததைச் சொல்லி மக்களை ஏமாற்றுவதுதான் இவர்களின் வேலை. இப்போது அடுத்த செட் பொய்களைத் தயார் செய்துவிட்டார்கள்," என்று அவர் எச்சரித்தார்.

டிவிகே-வின் 'சூப்பர் சிக்ஸ்' மற்றும் மக்கள் நலத் திட்டங்கள்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் எதையெல்லாம் செய்யும் என்பதை விஜய் உறுதியுடன் தெரிவித்தார்:

அன்னபூர்ணி சூப்பர் சிக்ஸ் திட்டம்: குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம்.

பெண்களுக்கான உதவித்தொகை: 60 வயது வரை உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2500 ரூபாய்.

திருமண உதவி: ஏழைப் பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை.

இலவசப் பேருந்து பயணம்: தமிழகத்தின் எந்தப் பகுதிக்கும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.

அடிப்படை வசதிகள்: கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர் மற்றும் சாலை வசதிகளுக்கு முதலிடம்.

அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாததால் ஒரு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தை வேதனையுடன் குறிப்பிட்ட அவர், அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராத இந்த 'தீயசக்தி' அரசைத் தூக்கி எறிய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

ஊழல் புகார்களும் 'ஸ்டாலின் டாக்ஸ்' விமர்சனமும்

திருச்சி அமைச்சரின் மீது ஊழல் புகாரைச் சுமத்திய விஜய், "நகராட்சித் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியிருக்கிறார்கள். ஒரு துறையிலேயே 1000 கோடி ஊழல் என்றால், மற்ற துறைகளைக் கணக்கிட்டால் தலை சுற்றும்," என்றார். மேலும், தான் முன்வைத்த 'ஸ்டாலின் டாக்ஸ்' (SST) குறித்து அரசு இதுவரை மௌனம் காப்பது, அவர்கள் ஊழலை ஒத்துக்கொண்டதையே காட்டுகிறது என்றார்.

கள்ளக் கூட்டணி குறித்த எச்சரிக்கை

திமுக மற்றும் பாஜக இடையே ஒரு 'கள்ளக் கூட்டணி' இருப்பதாகக் குறிப்பிட்ட விஜய், "காங்கிரஸை வைத்துக்கொண்டு சிறுபான்மை மக்களை ஏமாற்றும் ஒரு கூட்டணி, மறுபுறம் டெல்லி ஓனரோடு சேர்ந்து இயங்கும் கள்ளக் கூட்டணி. கொள்கை என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். திமுக-வுக்கு ஓட்டுப் போட்டாலும் சரி, 'மற்றும் பலர்' கூட்டணிக்கு ஓட்டுப் போட்டாலும் சரி, அது ஒன்றுதான். எனவே இருவரையும் நம்பாதீர்கள்," என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

விசில் புரட்சிக்கு அறைகூவல்

இறுதியாக, ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் மறக்காமல் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "வெளியூரில் இருப்பவர்கள் இப்போதே டிக்கெட் புக் செய்யுங்கள். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். எனக்காக அல்ல, உங்களுக்காகவும் உங்கள் நீதிக்காகவும் நான் வந்திருக்கிறேன். எத்தனை முனைப் போட்டி இருந்தாலும், இங்கே இருப்பது இருமுனைப் போட்டிதான். ஒன்று திமுக, இன்னொன்று டிவிகே. மக்கள் விரோத ஆட்சி வேண்டுமா? மக்களை நேசிக்கும் விஜய் வேண்டுமா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்," என்று உணர்ச்சிவசப்படப் பேசினார்.

" நான் தன்னந்தனி ஆளு நீ ஏளனமா பாரு கொஞ்சம் நவுந்தேனா 8 கோடி பேரு மெரள போகுது ஸ்டேட்டு எங்க விசிலு சத்தம் கேட்டு நல்லவங்க வாழ நீ விசிலுக்கடி ஓட்டு" விசில் அடிக்க ரெடியா இருங்க. வெற்றி நிச்சயம்!" என்ற முழக்கத்துடன் தனது உரையை நிறைவு செய்தார்.

Related Articles